கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்- இஸ்லாமியர்கள் பங்கேற்பு
வெள்ளியணை அருகே கல்லுடை ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Update: 2024-02-18 06:15 GMT
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கல்லுடை கிராமத்தில், அமர்ந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி, அருள்மிகு ஸ்ரீ மாசி பெரியண்ணன், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, கும்பாபிஷேக விழா கமிட்டியினர் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் புனித நீரை ஒவ்வொரு சுவாமிக்கும் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு விமர்சையாக நடத்தினர்.இதை தொடர்ந்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை, விழா கமிட்டியின் முக்கிய பொறுப்பாளரான சாமியம்மா, செந்தில், தேவராஜன்,அருண் உள்ளிட்டோர் சிறப்பாக நடத்தினர். நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், இஸ்லாமியர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.