கன்னியாகுமரியில் குவியும் கேரளா பக்தர்கள்
மண்டைக்காடு கோயில் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவியும் கேரளா பக்தர்கள்.
Update: 2024-03-11 04:58 GMT
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்கள் வார விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் அதிக அளவில் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளில் குவிந்தனர். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்துக் கிடந்தனர். பின்னர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர். இதற்கிடையில் தற்போது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு செல்லும் கேரளா பக்தர்கள் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் காலையில் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் தரிசனம் செய்துவிட்டு, மண்டைக்காடு புறப்பட்டு செல்வதை பார்க்க முடிகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டத்துடன் கன்னியாகுமரி கடற்கரையில் மண்டைக்காடு கோவிலுக்கு வரும் கேரளா பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரி தற்போது களைகட்டி காணப்படுகிறது. நாளை மண்டைக்காடு கோவில் விழா நிறைவடைகின்ற நிலையில் நாளைவரை இந்த கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.