வாலிபர் கடத்தல் : நண்பர் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலை
தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபரை கடத்தி தாக்கிய நண்பர் உட்பட 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி, முத்தையாபுரம், கிருஷ்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கனகலிங்கம் மகன் நாகலிங்க ராஜா (29). இவர், தெர்மல் நகர் கேம்ப் 1 பகுதியைச் சேர்ந்த ரசால் மகன் ஜெய பிரேம்சிங் (42) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா ஏஸ் வாகனத்தை 8 லட்ச ரூபாய்க்கு பைனான்ஸ் நிறுவனம் மூலம் லோன் மூலம் வாங்கி கொடுத்துள்ளார். ஜெய பிரேம் சிங் ஒரு மாத பணம் ரூ.23,033 கட்டியுள்ள நிலையில் தெர்மல்நகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.
இதனால் நாகலிங்க ராஜா ஆறு மாதங்களாக தவனையை கட்டியுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயபிரேம் சிங்கிடம் தான் கட்டிய ஆறு மாத பணத்தை தரும்படியும், மேலும் லோனை தனது பெயருக்கு மாற்றிவிடுமாறு கேட்டாராம். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் முத்தையாபுரம் பெட்ரோல் பல்க் ஜங்ஷன் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நாகலிங்க ராஜாவை ஜெய பிரேம் சிங் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வழிமறித்த கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தெர்மல்நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சிவராஜா, மற்றும் தனிப்படை செந்தில்ராஜ், சுடலைமணி ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர தேடுதல் நடத்தியதில், முத்துநகர் ஓடை பின்புறம் பகுதியில் ரத்த காயங்களுடன் அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெய பிரேம்சிங், உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.