கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஆகும். குழந்தை வரம் வேண்டி பிறக்கிற குழந்தைகள் மற்றும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் நீடுழி வாழ வேண்டி தூக்க நேர்ச்சையில் பெற்றோர்கள் கலந்து கொள்ள வைக்கின்றனர்.
நேர்ச்சையில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் குடும்பத்தினர் திருவிழா கொடியேறிய நாள் முதல் விரதம் கடைபிடிக்கின்றனர்.குழந்தையை நேர்ச்சை வில்லில் சுமந்து செல்லும் தூக்ககாரர்கள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தூக்க நேர்ச்சையில் தமிழக கேரள பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை இன்று நடப்பதை ஒட்டி அதிகாலை நான்கு மணியளவில் வழக்கமான பூஜைகள் முடிந்து, தூக்ககாரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்கின்றனர். அதை தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளி காலை 6.30 மணியளவில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஆரம்பமாகிறது. முதலில் நான்கு அம்மன் தூக்கம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 1359 குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது.அதன்படி வில்லானது 349 முறை கோயிலை சுற்றி வரும் போது தூக்க நேர்ச்சை நிறைவடைகிறது. தூக்கத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதை கருத்தில்கொண்டு ஏராளமான போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்