கழிவுநீரால் தனித்தீவாக மாறிய கோனேரிகுப்பம் ரேஷன் கடை
காஞ்சிபுரம் மாவட்ட, கோனேரிகுப்பம் ரேஷன் கடையை சுற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் சுற்றி இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, இந்திரா நகர் ரேஷன் கடையில், 1,027 கார்டுதாரர்களுக்கு, கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடையை ஒட்டி வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீரை சாலையில் விடுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால், மழைநீருடன், கழிவுநீர் கலந்து ரேஷன் கடையை சுற்றிலும் தேங்கியுள்ளது.
இதனால், ரேஷன் கடை தனி தீவுக்குள் இருப்பது போல் உள்ளது. இதனால், ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.மேலும், ஒரே இடத்தில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், இந்திரா நகரில், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ரேஷன் கடையை பகுதியில் விட்டுள்ள கழிவுநீர் பைப்பை அகற்றவும், கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ரேஷன் கடையை சுற்றிலும் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திரா நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.