கோனியம்மன் கோயில் தேர் திருவிழா- பல்லாயிரக்கணக்கான சாமி தரிசனம்!.
கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவையின் காவல் தெய்வமாக கோனியம்மன் போற்றி வணங்கப்படுகிறது. அம்மனை வேண்டி தரிசனம் செய்தால் நினைத்தவை நிறைவேறும் என்பது ஐதீகம். நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவையை ஆண்ட கோவன் என்ற அரசனும், இளங்கோசரும் கோவில் கட்டி வழிபாடு செய்தனர். பல வரலாற்றுச் சிறப்புகள் மிக்க இந்த கோனியம்மன் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
கோயில் திருவிழாவை ஒட்டி பல்வேறு ஊர்களிலும் உள்ள மக்கள் கோவையில் திரண்டு தேர்வு விழாவில் பங்கேற்பர்.அந்த வகையில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்முட்டி வீதி எனக் கூறப்படும் தேர்நிலைத் திடலில் தொடங்கிய தேரோட்டம் ராஜவீதி ஒப்பணக்கார வீதி வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் நிலை திடலை அடைந்தது.
தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த போது பிரபல முன்னணி வணிக வளாகங்கள் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தேர் வீதி உலா வந்த போது பக்தர்கள் தேர் மீது உப்பு வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.இவ்வாறு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் சமூக நல்லிணக்கம் போற்ற வகையில் பெரியகடை வீதியில் உள்ள அத்தார் ஜாமாத் பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம் அமைப்பினர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கினர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு வழங்கி வருவதாகவும் சுமார் 10,000 பாட்டில்கள் மக்களுக்கு வழங்கபட்டதாக ஜமாத் அமைப்பினர் தெரிவித்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு கோவையின் முக்கிய வீதிகள் வழியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் தேர் வீதி உலா வரும் சாலைகளிலும் இணைப்பு சாலைகளிலும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ஒப்பணக்கார விதி ராஜவீதி,வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி,உக்கடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு உணவு மற்றும் நீர் மோர் வகைகள் வழங்கபட்டது.