கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் - அதிமுக, பா. ஜ., வெளிநடப்பு
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்திலிருந்து அ.தி.மு.க.,-பா. ஜ., கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. மொத்தமுள்ள, 33 கவுன்சிலர்களில், 32 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் வசந்தி முன்னிலை வகித்தார். இதில், தகைசால் தமிழர் விருது பெற்ற சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிதா நவாப்,சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை சேதங்களை விரைந்து சரிசெய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து சென்ற, 50 துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். அப்போது குறுக்கிட்ட, 12 வது வார்டு அ.தி.மு. க., கவுன்சிலர் எழிலரசி மழை சேதங்களை முழுமையாக சரிசெய்யவில்லை என்றார். அதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எழுந்து2015ல், சென்னையில் வெள்ளம் வந்த போது, 10 நாட்கள் ஆகியும் அப்போதைய அ.தி.மு.க., அரசு என்ன செய்தது. அ. தி. மு.க., தலைமை எவ்வழியோ அவ்வழியே அக்கட்சியினரும் நடப்பது வருத்தமளிக்கிறது என்றார்.
இதைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், பாஜக உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நகராட்சி செயற்பொறியாளர் சேகரன், நகராட்சி துணைதலைவர் சாவித்திரி மற்றும் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.