மாநில ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிறுவனுக்கு பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 6 வயது சிறுவன் நித்திஷ் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொடர்ந்து பயிற்சி மையம் மற்றும் வீரர், வீராங்கனைகள் சார்பில் மத்தாப்பு கொளுத்தியும் , கேக் வெட்டியும் வீரரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
Update: 2024-02-07 11:01 GMT
மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 6 வயது சிறுவன் நித்திஷ் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொடர்ந்து பயிற்சி மையம் மற்றும் வீரர், வீராங்கனைகள் சார்பில் மத்தாப்பு கொளுத்தியும் , கேக் வெட்டியும் வீரரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த தனிகைவேல் மற்றும் ஜான்சிராணி தம்பதியரின் மகன் நித்திஷ். இவர் அங்குள்ள பிஏவி தனியார் ஆங்கிலப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். நான்கு வயது முதலே காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா எதிரே உள்ள காஞ்சி ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையிலேயே 15 க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பயிற்சியாளர் பாபு தலைமையில் பங்கேற்றார். இதில் 15 மாநிலங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த போட்டியில் நித்திஷ், 6 முதல் 8 வயது உடையோருக்கான 1000மீட்டர் பிரிவு தூரம் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். சிறுவயதிலேயே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்துடன் காஞ்சி திரும்பிய அவருக்கு காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் மத்தாப்புகள், பட்டாசு கொளுத்தியும் வரவேற்று , கேக் வெட்டி மகிழ்ச்சியை வெற்றி பெற்ற வீரருடன் சக வீராங்கனைகள் கொண்டாடினர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள் பயிற்சி மைய உதவி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆறு வயதிலேயே மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிறுவன் நித்திஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.