குமரி முன்னாள் மேல்சபை எம்.பி விஜயகுமார் பாஜகவில் இணைந்தார்
குமரி முன்னாள் மேல்சபை எம்.பி விஜயகுமார் பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமாக பதவி வகித்தவர் விஜயகுமார். இவர் நேற்று அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல் முருகன் ஆகியோரை சந்தித்து பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார். விஜயகுமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தவர். அதிமுகவின் மாவட்ட செயலாளராக சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டவர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என அதிமுக இரு அணிகளாக பிரிந்த நேரத்திலும் எந்த அணியிலும் இடம் பெறாமல் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். 15ஆம் தேதி கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி பாரதிய ஜனவரியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதன் பின்னர் நேற்று இந்த இணைப்பு நடந்துள்ளது. இதற்கிடையே விஜயகுமார் தான் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட உள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் கூறிதான் அவர் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி கூடுதல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.