குமரி: சுற்றுலா வந்த கேரள மாணவர் ஆற்றில் மூழ்கி பலி.
Update: 2023-12-10 03:29 GMT
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டர் மாணவர்கள் 26 பேர், 2 ஆசிரியர்கள் நேற்று குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு வந்தனர். பின்னர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் பரளியாற்றில் 6 மாணவர்கள் குளிக்க இறங்கியதாகத் தெரிகிறது. இதில் நஜாப் என்ற மாணவரை வெள்ளம் அடித்து சென்றது. குலசேகரம் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மாலை வரை தேடியும் மாணவர் கிடைக்காத நிலையில், பத்மநாபபுரம் தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டருடன் தேடுதல் நடத்தினர். இரவுவரை தேடியும் கிடைக்காததால், தேடும் பணியை நிறுத்தினர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு என்றும் பாராமல் தேடுதல் பணியை தொடர்ந்து செய்தனர். இந்த நிலையில் சுமார் இரவு எட்டு மணியளவில் நீரில் மூழ்கி இறந்த மாணவன் உடல் மீட்கப்பட்டது. உடலை போலீசார் கைபற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜிக்கு உடல் கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கிய நஜாப் திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள மாடல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.