கட்டளைசேரி கிராமத்தில் கும்பாபிஷேகம் விழா
மயிலாடுதுறை அருகே கட்டளைசேரி கிராமத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பொன்னூர் கட்டளைசேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயம், பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், நெல்லி கொல்லை மாரியம்மன் ஆலயம், மன்மத சாமி ஆலயம் ஆகிய ஐந்து ஆலயங்கள் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயங்கள் கிராம மக்கள் உதவியுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் கடந்த 26 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. புனித நீர் அடங்கிய கடன்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு நான்கு கால யாகம் நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து.
மகா பூர்ணாகுதிக்கு பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்து அங்கு பூஜைக்கப்பட்ட கும்ப கலச விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. 2000-க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.