குருங்குளம் சர்க்கரை ஆலை முறைகேடு: சட்டப்படி நடவடிக்கை
குருங்குளம் சர்க்கரை ஆலை முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்
குருங்குளம் சர்க்கரை ஆலை முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலரும், சர்க்கரைத் துறை ஆணையருமான சா. விஜயராஜ்குமார் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சர்க்கரைக் கழக பங்குதாரர்களின் 48 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பல்வேறு நிதிச்சுமைகள், முக்கியமான செலவினங்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசு ஆலைகளில் 40 லட்சம் டன்களும், தனியார் ஆலைகளில் ஒரு கோடி டன்களும் அரைவை செய்யப்பட்டது.
அரசு ஆலைகளுக்கு மட்டுமல்லாமல், தனியார் ஆலைகளுக்கும் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு ரூ. 262 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சர்க்கரைக்கு கிலோவுக்கு ரூ. 42 உற்பத்தி செலவாகிறது. சந்தையில் நமக்கு கிலோவுக்கு ரூ. 36 முதல் ரூ. 39 வரைதான் கிடைக்கிறது.
சர்க்கரை கழிவுகளிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கணக்கில் சேர்த்தாலும், ஒவ்வொரு கிலோ உற்பத்திக்கும் குறைந்தது ரூ. 2 முதல் 3 நட்டத்தைத்தான் தருகிறது. கடந்த ஆண்டு பல்வேறு முயற்சிகளின் மூலம் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை கட்டுமான அளவு (பிழிதிறன்) 8.50 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளில் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, அரூர் ஆகியவற்றில் 10.50 முதல் 11 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் கிடைத்தது. இதன் மூலம் இந்த ஆலைகளைச் சார்ந்த விவசாயிகள் டன்னுக்கு கூடுதலாக ரூ. 200 - 250 பெற்றனர். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 6 லட்சம் டன் அரைவை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2.50 லட்சம் டன்தான் அரைவை செய்யப்பட்டது. இதில், 60 ஆயிரம் டன் பக்கத்து ஆலையிலிருந்து வாங்கப்பட்டன. ஆனால், குருங்குளம் ஆலையில் உண்மையாக 1.90 லட்சம் டன் கரும்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கரும்பு பரப்பளவு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக விவசாயிகள், ஆலை அலுவலர்கள் கூட்டு முயற்சி மேற்கொண்டால் அதிகப்படுத்த முடியும். கரும்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊதியம் வருகிறது என ஊழியர்கள் கருதினால், நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. விவசாயிகள் கரும்பு பயிரிட்டால்தான் ஆலையும் நீடிக்கும். குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக அலுவலர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
தவறு இழைத்தவர்கள் நிச்சயமாக தண்டனை பெறுவர்" என்றார் விஜயராஜ்குமார். முன்னதாக, விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கருத்துகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேசினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழக ஆளுநரின் பிரதிநிதி கே. சித்ரா, தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேலன், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஆ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.