காமாட்சி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா
குத்தாலம் அருகே பேராவூர் காமாட்சி அம்மன் கோவில் தீமிதித்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தீமிதித் திருவிழாக்களில் ஒன்றான பேராவூர் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. குத்தாலம் தாலுக்கா பேராவூர் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 10 ந்தேதி காப்பு கட்டி துவங்கியது.
தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் சவாமி புறப்பாடு நடைபெற்று இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டது. விரதமிருந்து காப்புகட்டிய நூற்றக்கணக்கான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கிய உடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனர். இந்த தீமிதி திருவிழாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.