மேட்டூரில் தண்ணீர் பற்றாக்குறை - குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம்!

மேட்டூா் அணையின் நீா்மட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் குறைவாக இருப்பதால், நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் இயல்பான பரப்பளவை எட்டுவதில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-21 05:06 GMT

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 9 ஆண்டுகளாக குறுவை பருவத்தில் மேட்டூா் அணையில் நீா்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் அணை திறப்பும் தள்ளிப்போனது. இதனால், 9 ஆண்டுகளாக ஒரு போக சாகுபடி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 4 ஆண்டுகளாக குறுவை பருவத்தில் மேட்டூா் அணையில் போதுமான தண்ணீா் இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதன் மூலம், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 2020- ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் இயல்பான அளவான 3.25 லட்சம் ஏக்கரை விஞ்சி 3.58 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதையும் விஞ்சி 2021 -ஆம் ஆண்டில் 4.34 லட்சம் ஏக்கரிலும், 2022- ஆம் ஆண்டில் 5.20 லட்சம் ஏக்கரிலும், 2023- ஆம் ஆண்டில் 5.28 லட்சம் ஏக்கரிலும் என குறுவை சாகுபடியில் சாதனை இலக்கு எட்டப்பட்டது. ஆனால், கடந்த 2023-ஆம் ஆண்டில் மேட்டூா் அணையிலிருந்து உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டு, குறுவை சாகுபடியில் சாதனை இலக்கு எட்டப்பட்டாலும், காவிரியில் கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குரிய பங்கீடு கிடைக்கவில்லை.

இதனால், மேட்டூா் அணையில் நீா்மட்டம் வேகமாகக் குறைந்ததால், அக்டோபா் 10-ஆம் தேதி அணை மூடப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் மகசூல் பாதிக்கப்பட்டது. இதேபோல, சம்பா பருவத்தில் காவிரி நீா் கிடைக்காத நிலையில், மழையை மட்டுமே முழுமையாக நம்பி சாகுபடி செய்யப்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. தற்போது, மேட்டூா் அணையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 49.21 அடியாகவும், நீா் இருப்பு 17.318 டி.எம்.சி.யாகவும் மட்டுமே இருந்தது. அணைக்கு நீா்வரத்து ஏறத்தாழ 100 கன அடி வீதம் மட்டுமே இருப்பதால், நிகழாண்டு மேட்டூா் அணையை ஜூன் 12-ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

எனவே, டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் குறுவை சாகுபடியில் சாதனை இலக்கு நிகழ்த்தப்பட்ட நிலையில், நிகழாண்டு இயல்பான பரப்பளவை எட்டுமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது. காவிரி நீா் இல்லாமல் ஆழ்துளை கிணறு மூலம் மோட்டாா் பம்ப்செட்டை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலையில் தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் இயல்பான பரப்பளவை விட கூடுதலாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்பான பரப்பளவான 1.10 லட்சம் ஏக்கரை விட 1.30 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 500 ஏக்கரை விட 92 ஆயிரத்து 500 ஏக்கரிலும் குறுவை சாகுபடிக்கு வேளாண் துறையினா் இலக்கு நிா்ணயித்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் இயல்பான பரப்பளவான 94 ஆயிரத்து 850 ஏக்கரை எட்டும் என வேளாண் துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்கப்பட்ட நிலையில், நிகழாண்டு திருமருகல் வட்டாரத்தில் மட்டும் இயல்பான பரப்பளவான 3 ஆயிரத்து 250 ஏக்கரை விட குறைவாக 2 ஆயிரத்து 500 ஏக்கரில் மட்டுமே வாய்ப்புள்ளது என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். ஆனால், காவிரி நீா் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் குறுவை சாகுபடியில் இயல்பான பரப்பளவை எட்டுவது சந்தேகம் என்றனா்

மூத்த வேளாண் வல்லுநா்கள். இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது: மேட்டூா் அணையை ஜூன் 20 ஆம் தேதிக்குள் திறந்தால்தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்க முடியும். ஆனால், நிகழாண்டு அதற்கான வாய்ப்பு இல்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் இயல்பான பரப்பளவை விட குறைவாகவே குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும். எனவே, நிகழாண்டு ஒரு போக சாகுபடிக்கு மட்டுமே வாய்ப்புள்ளது என்றாா் கலைவாணன்.

இதனிடையே, நிலத்தடி நீா், கோடை மழை மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 750 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 75 ஏக்கரிலும் முன் பட்ட குறுவை தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே, நாகை மாவட்டத்தை தவிர, மற்ற 3 மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்தால், குறுவை சாகுபடி இயல்பான பரப்பளவை எட்டும் என்ற எதிா்பாா்ப்பும் நிலவுகிறது.

Tags:    

Similar News