சாய்ந்த மின் கம்பம் - பம்ப் செட் இயங்காமல் 100 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
மயிலாடுதுறை அருகே கோமல் கிராமத்தில் வயலுக்கு செல்லும் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில், மின்சார கம்பி அறுந்து, ஒரு வாரத்துக்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 21 பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் இல்லாமல் 100 ஏக்கரில் குறுவை சாகுபடியை தொடங்கமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் கிழக்கு பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் 21 பம்பு செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் விவசாயிகள் குருவை சாகுபடி துவங்கிய நிலையில் வயலில் உள்ள இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் உயர் மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் உழவடித்து நிலத்தை தயார் செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் விவசாய பணிகளை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.
காமராஜ் என்ற விவசாயி விவசாய பணிகளை தொடங்கி, 8 ஏக்கர் நிலத்தில் நீர் பாய்ச்சி முழுவதுமாக உழவு அடித்து, அதற்கு தேவையான நாற்றங்கால்களை விதை விட்டிருந்த நிலையில், மின்சாரம் தடைபட்டதால், முளைக்கத் தொடங்கியுள்ள நாற்றங்கால்களை காப்பாற்றுவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளானார். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மறுநாளே அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் அங்கு புதிதாக 3 மின் கம்பங்களை நட்டுள்ளனர். ஆனால், அதன் பின்னர் அங்கு மின் கம்பிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதனால், போர்வெல் மூலம் தண்ணீர் இறைத்து நிலங்களை உழவு அடிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் அதனை தொடர முடியாமல் நிறுத்தியுள்ளனர்.
மேலும், நாற்றங்கால்களை கருகாமல் காப்பாற்றுவதற்காக விவசாயி காமராஜ்; 2 கி.மீட்டர் தூரத்துக்கு டிராக்டர் மூலமாக கேன்களில் தண்ணீர் எடுத்து வந்து அதை டியூப் கொண்டு நாற்றங்காலுக்கு பாய்ச்சி நாற்றங்கால்களை காப்பாற்றி வருகிறார். மேலும் உழவு அடிக்கப்பட்ட 8 ஏக்கர் விவசாய நிலமும் தண்ணீர் இல்லாமல் முற்றிலுமாக வறண்டு வெடிக்க தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு கொடுத்தால் கூட மீண்டும் ஒருமுறை உழவு பணிகளை முதலில் இருந்தே தொடங்க வேண்டுமென விவசாயி காமராஜ் வேதனை தெரிவித்துள்ளார். இதுவரை 8 ஏக்கர் விவசாய நிலத்துக்கு ரூ.60,000 வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயி காமராஜ், உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் மின் இணைப்பு வழங்கி, கருகத் தொடங்கியுள்ள பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.