விரைவு அஞ்சல் மூலம் லைசென்ஸ், ஆர்.சி புக்
ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக்கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "28.02.2024 முதல் அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக்கூடாது. வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் தவறான அலைபேசி எண் மற்றும் முகவரி தவறாக குறிப்பிட்டு தபால் துறையினரால் இவ்வலுவலகத்திற்கு திரும்பி வரப்பெற்றால்; அவற்றை மென்பொருளில் சரிசெய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி, திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் வெளியூர் சென்று இருந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக அவரது ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச்சான்று தபால் துறை மூலம் திரும்ப பெறப்பட்ட பின்னர் தொடர்புடைய விண்ணப்பதாரர் அலுவலகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவரிடம் நேரடியாக ஒப்படைக்ககூடாது. மாறாக, அத்தகைய விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையை பெற்றுக் கொண்டு அதன் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும். தவறான முகவரியோ அல்லது அலைபேசி எண்ணையோ விண்ணப்பதாரர் மென்பொருளில் பதிவேற்றம் செய்திருந்தால் அதற்கு விண்ணப்பதாரரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்புவது தொடர்பான உத்தரவினை முழுமையாக செயல்படுத்த ஏதுவாக விண்ணப்பதாரர்கள் அவர்தம் உரிய முகவரி மற்றும் அலைபேசி எண் போன்றவற்றை ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்று தொடர்பான விண்ணப்பங்களில் சரியாக குறிப்பிட்டு அதனை உறுதி செய்து கொண்டு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.