வாலிபரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வாலிபரை குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Update: 2024-06-30 11:45 GMT
தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் கீழமுடிமண்ணை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் மதன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கும், ஓட்டப்பிடாரம் மேலமுடிமண்ணை சேர்ந்த கூலித் தொழிலாளி வேல்சாமி மகன் மாரிமுத்து (41) என்பவரின் உறவுக்கார பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மதன், அந்த பெண்ணை தன்னோடு அழைத்து சென்று உள்ளார். இது தொடர்பாக மதனுக்கும், மாரிமுத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 21.8.2020 அன்று மதன், மேலமுடிமண்ணில் உள்ள சுந்தர்ராஜ் என்பவர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வந்து உள்ளார். அதே திருமணத்துக்கு மாரிமுத்தும் வந்தார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மதன் திருமண வீட்டில் இருந்து புறப்பட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, வழியில் அவர் சிறிது நேரம் மேலமுடிமண் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். இதனை அறிந்த மாரிமுத்து, வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக் கொண்டு பஸ் நிறுத்தத்துக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த மதனிடம் தகராறு செய்து, மறைத்து வைத்து இருந்த கத்தியால் மதனை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உதய வேலன் குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜர் ஆனார்.