பாதுகாப்பு பணியை போல், குடும்ப நலனிலும் அக்கறை காட்டணும்...!
பாதுகாப்பு பணியை போல், குடும்ப நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என காவலர்களுக்கான முகாமில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் கீழ் ஆயுதப் படை பிரிவு செயல் பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் அல்லது பிற மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் இவர்கள் அனைவரும் ஈடுபடுவர். வருடத்துக்கு ஒரு முறை இவர்களுக்கு பயிற்சி நினைவூட்டல் நிகழ்வு ஜனவரி மாதம் முழுவதும் நடைபெறும்.
இதன் நிறைவு விழா இன்று காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் கவாத்து பயிற்சி நினைவூட்டல் நிறைவு விழா நடைபெற்றது. இதில் ஆயுதப்படை காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பாடல் , கவிதை , பலகுரல் பேச்சு , விழிப்புணர்வு பாடல்கள், இசை வாத்தியங்கள் வாசித்தல் என தங்களது தனித்திறமையினை வெளிக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர்.
இந்த நிறைவு விழாவில் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் , ஆண்டுதோறும் காவலர் பணி என்பது கடும் நெருக்கடி சூழலிலே அமைந்து விடுவதால் அனைவரும் மன அழுத்தத்துடனே பயணிக்கின்றனர். இதுபோன்ற நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் நிலையில் இதனை தவிர்த்து விட்டு குடும்ப நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்பு குடும்பங்களின் திருமண நிகழ்வுகள் என பலவற்றில் கலந்து கொண்டு நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்கி கொள்ள வேண்டும். திரைப்படங்களும், பொதுமக்களும் காவல்துறையை தவறான பார்வையிலே புரிந்து கொள்ளாமல் பேசி வருவதும் அதன்பின் நிலையை உணர்ந்த பின் காவல்துறையை பாராட்டுவதும் வழக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்விப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மூன்றாண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவதால் ஆயுதப்படை காவலர்கள் மட்டுமில்லாத அனைவரும் மகிழ்ச்சி உற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை பிரிவு அலுவலர்கள் காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.