கூட்டுறவு வங்கிகளில் சலுகை வட்டியில் கடனை திருப்பி செலுத்தலாம்
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 9 சதவீத சலுகை வட்டியில் கடனை திருப்பி செலுத்தலாம் என்று கலெக்டர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.
கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நீண்ட கால கடன் நிலுவைகளை 9 சதவீத சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம். அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அரசு அறிவித்துள்ள சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
மேலும், சிறுவணிகம், போக்குவரத்து, கைத்தறி, விசைத்தறி, தொழில், வாணிபம், வீடு கட்டுதல், வீட்டு அடமானம், 2021-ம் ஆண்டில் தள்ளுபடி கிடைக்கப் பெறாத தகுதியான மகளிர் சுயஉதவிக்குழு, ஆண்கள் சுயஉதவிக்குழு, கூட்டுப்பொறுப்புக்குழு கடன்கள் இதற்கு பொருந்தும். அதே போன்று தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல், விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடம் இருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவைகளுக்கு இந்த கடன் தீர்வுத் திட்டம் பொருந்தும்.
31.12.2022 அன்று கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவடைந்து, தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். குறிப்பாக, 31.12.2022-க்குப் பிறகு கடன் தவணை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூட்டுறவுச் சங்கங்களில் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து (13.12.2023) 3 மாதத்திற்குள் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதிக்குள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சங்கம் அல்லது வங்கியில் செலுத்த வேண்டும்.
மீதி 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 22 ஆயிரம் பேர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இதில் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.