மக்களவைத் தேர்தல் : நாளை டாப்சிலிப் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
மக்களவை தேர்தலையொட்டி சுற்றுலாத்தலமான பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை ஒரு நாள் மட்டும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சுற்றுலாத்தலமான பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நாளை தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எனது வாக்கு எனது உரிமை என்னும் அடிப்படையில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றும் வகையில் தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நாள் என்பதால் அனைவரும் 100 % சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாளை தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்திருந்தார் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இதனால் சுற்றுலா தளமான டாப்ஸ்லிப் பகுதியில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களும் வாக்கு செலுத்த செல்ல வேண்டி இருப்பதாலும் நாளை சுற்றுலா பயணிகளை டாப்ஸ்லிப் பகுதிக்கு அனுமதித்தால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.