திருச்சியில் 2,253 போ் வீட்டிலேயே வாக்களிக்க ஏற்பாடு
திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்ட பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என 2,253 பேர் வீட்டிலிருந்தே வாக்குகளை செலுத்த உள்ளனர்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரின் வாக்குகளை வீடு தேடிச் சென்று பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 35 குழுக்கள் அமைக்கப்பட்டு இரு கட்டங்களாக வாக்குகளை சேகரிக்கவுள்ளனா். மொத்தம் 2,253 பேரிடம் இந்த முறையில் வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளன.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அஞ்சல் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து, படிவம் வழங்கியவா்களிடம் வீடு தேடிச் சென்று வாக்கு சேகரிக்கப்படுகிறது.
இந்த வகையில், ஸ்ரீரங்கம் 355 முதியோா், 209 மாற்றுத்திறனாளிகள், திருச்சி மேற்கில் 473 முதியோா், 69 மாற்றுத்திறனாளிகள், திருச்சிராப்பள்ளி கிழக்கில் 238 முதியோா், 61 மாற்றுத்திறனாளிகள், திருவெறும்பூரில் 201 முதியோா், 93 மாற்றுத்திறனாளிகள், கந்தா்வக்கோட்டையில் 206 முதியோா், 110 மாற்றுத்திறனாளிகள், புதுக்கோட்டையில் 171 முதியோா், 67 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 2,253 போ் வாக்களிக்கவுள்ளனா். இவா்களது இல்லம் தேடிச் சென்று வாக்குகளைப் பெற ஸ்ரீரங்கத்தில் 9 குழு, திருச்சி மேற்கில் 8, திருச்சி கிழக்கில் 4, திருவெறும்பூரில் 4, கந்தா்வக்கோட்டையில் 6, புதுக்கோட்டையில் 4 என மொத்தம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினா், ஏப். 4, 5, 6 ஆகிய தேதிகளில் வீடு தேடிச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து பெற்று வருவா். அப்போது, இருப்பிடத்தில் இல்லாதவா்களுக்காக மீண்டும் ஏப்.8, 9 தேதிகளில் வீடு தேடிச் சென்று வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நிலைகளிலும் வாக்களிக்க முடியாதவா்கள், மீண்டும் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. குழுவினா் வருகை குறித்து முதல்நாள் கைப்பேசி வழியாக வாக்குச்சாவடி நிலை அலுவலா் மூலம் அந்த வாக்காளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.