மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி
மக்களவை தேர்தலை முன்னிட்டு, மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து மண்டல அளவிலான அலுவலர்களான புத்தாக்கப் பயிற்சிகள் மேற்கொள்ளும் பொருட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 90 மண்டல அளவிலான அலுவலர்களுக்கும், இதேபோன்று காரைக்குடி பகுதியில் பூமாலை வணிக வளாகத்தில், காரைக்குடி, ஆலங்குடி மற்றும் திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 85 மண்டல அளவிலான அலுவலர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சிகள் நடைபெறுகிறது.
இப்புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் தங்களது பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து, பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் உரிய அறிவுரைகளை வழங்கினர். மேலும், மண்டல அலுவலர்களுக்கான நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் பணி கையேடுகள் வழங்கப்பட்டு, அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.