லாரி மோதி ராஜீவ்காந்தி சிலை சேதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு

ஆரல்வாய்மொழி அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை உடைந்து கிடக்கும் தகவலறிந்து காங்கிரஸ் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-06-18 06:18 GMT

சேதமடைந்த ராஜீவ் காந்தி சிலை 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாயம் விலக்கு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு இருந்தது. 1992-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர்களில் ஓருவரான ஜி.கே.மூப்பனார் இந்த சிலையை திறந்து வைத்தார். ராஜீவ்காந்தி சிலை அருகே டீக்கடையும் செயல்பட்டு வந்தது. இதனால் காலை முதல் இரவு வரை அங்கு மக்கள் கூட்டம் இருக்கும். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டீ கடைக்கு வந்துள்ளனர்.

Advertisement

அப்போது அங்கு ராஜீவ்காந்தி சிலை உடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலை அருகே உள்ள கடையும் சேதமாகி காணப்பட்டது.  ராஜீவ்காந்தி சிலையை யாரோ உடைத்து சேதப்படுத்தியதாக தகவல் பரவ, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.   

ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர்.   இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் நாகர்கோவில்-நெல்லை சாலையில் பாரம் ஏற்றப்படாத டாரஸ் லாரி வேகமாக வருவதும் அந்த லாரி, ராஜீவ்காந்தி சிலை மற்றும் டீக்கடையில் மோதிவிட்டு நிற்காமல் செல்வதும் தெரியவந்தது.

ராஜீவ்காந்தி சிலை உடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் செல்லமணி, ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு டாரஸ் லாரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News