லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் வேலை இழப்பு

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் செல்ல. இராசாமணி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Update: 2024-05-21 16:16 GMT

லாரி ஓட்டுநர்

தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் தங்கு தடை இன்றி நடைபெறவும், மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு இயங்காமல் நிறுத்தி வைத்துள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் செல்ல. இராசாமணி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல. இராசாமணி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கூறிய அவர், தமிழகத்தில், அரசு மணல் குவாரிகள், அரசு மணல் விற்பனை நிலையங்கள், அமலாக்கத் துறை சோதனைக்கு பின் மூடப்பட்டதால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன. மணலுக்கு மாற்றான எம்.சாண்ட் விலை ₹2500 லிருந்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், எனவே கடந்த 3 நாட்களுக்கு முன் சுற்றுசூழல் மதிப்பீட்டு குழுவின் அனுமதி அளித்த 26 இடங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கிய இடங்களில் அரசு, மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், ஆன் லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு அரசே நேரிடையாக யூனிட் ஆயிரம் ரூபாய்க்கு மணல் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மணல் குவாரிகள் மூடப்பட்டதால் 55 ஆயிரம் மணல் லாரிகள் வேலை இழந்து, லட்சக்கணக்கான ஓட்டுநர்கள், மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் மணல் குவாரிகள் உடனடியாக திறக்கப்பட்டால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு கட்டுமான பணிகள் மீண்டும் தடையின்றி நடைபெறும் என தெரிவித்தார்.

எனவே, மணல் குவாரிகளை உடனடியாக அரசு திறக்க வேண்டும் எனவும், எம். சாண்ட் உற்பத்தி செய்ய தமிழகத்தில் பெருமளவு பாறைகள் உடைக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டு தண்ணீர் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு எம்.சாண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதன் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் ஆனால் அரசு அனுமதித்த ஒரு மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளினால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது மணல் உற்பத்தியாகும் என அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News