மடவிளாகத்தில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
காங்கேயம் அருகே மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி உத்திர தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
காங்கேயம் அருகே உள்ள மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் 2500க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் 18ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது இதில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகலநாயகி அம்மன் தேர் என நான்கு தேர் முன்னாள் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். ஒரு கிலோ மீட்டர் தூரம் கோவிலை சுற்றி தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் 2500 க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.