ராஜாங்க அலங்காரத்தில் வைகையாற்றில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகர்

சித்திரை திருவிழாவையொட்டி கால்மேல் கால் போட்டு ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் தடம்பார்க்கும் நிகழ்விற்காக வைகையாற்றில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-26 05:04 GMT

அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்

 மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வுக்காக அழகர்கோயிலில் இருந்து கடந்த 21 ஆம் தேதி தங்க பல்லக்கில் புறப்பாடாகிய கள்ளழகர் , 22 ஆம் தேதி எதிர்சேவையான நிலையில் 23 ஆம் தேதி அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனைவதொடர்ந்து விழாவின் 6 ஆம் நாள் சிகர நிகழ்வாக வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

அதன் பின் நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய கள்ளழகருக்கு தசாவதாரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் 7 ஆம் நாள் திருவிழாவின் மாலை நிகழ்வாக கள்ளழகர் திவான் இராமராயர் மண்டபத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் தந்த பல்லக்கு எனும் அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளம் நோக்கி புறப்பட்டார். திவான் இராமராயர் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதிச்சியம், ஆழ்வார்புரம், வைகை வடகரை ஆகிய பகுதிகளில் உள்ள வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் கள்ளழகருக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து கள்ளழகர் வைகையாற்றுக்குள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பகுதியான ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் அழகர் வீர ராகவ பெருமாள் சந்திப்பு மண்டகப்படிகளில் ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளியபோது வைகையாற்றிற்குள் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பக்திகோசம் முழங்க கையில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி் தரிசனம் செய்தனர். வைகையாற்றிற்குள் மீண்டும் கள்ளழகர் எழுந்தருளிய போது இதுவரை இல்லாத வகையில் வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்து காணப்பட்டனர். இதனை தொடர்ந்து மூங்கில்கடை தெரு பகுதி, கோரிப்பாளையம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு எழுந்தருளினார். பின்னர் கள்ளழகருக்கு திருமஞ்சனமாகி நள்ளிரவில் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

Tags:    

Similar News