மதுரை - கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு
கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை - கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு ஹைதராபாத் அருகில் உள்ள கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும் கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) பிப்ரவரி 5 முதல் மார்ச் 25 வரை இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் காலை 07.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் (09172) பிப்ரவரி 7 முதல் மார்ச் 27 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.