வேறு ஆணுடன் திருமணம் - மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு
ஆரல்வாய்மொழியில் திருமணமானதை மறைத்து வேறொருவரை திருமணம் செய்த மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 47 வயதுடைய தொழிலாளி ஒருவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். தொழிலாளியின் மகன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தொழிலாளியின் மனைவி இன்ஸ்டாகிராம் வலைத் தளத்தில் ஆர்வம் உடையவர். அதன் மூலம் மதுரையை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருப்பதை மறைத்து அந்த வாலிபருடன் பழகி உள்ளார். பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி தனிமையில் கள்ளக்காதலை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
அதே நேரம் தன்னுடைய கணவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி மதுரைக்கு சென்று அந்த வாலிபருடன் குடும்ப நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மதுரை வாலிபருடன் பெண் திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது மதுரைக்கு சென்ற அந்த பெண் ஒரு வாரம் கழித்து நேற்று முன்தினம் காலையில் வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மனைவியிடம் இது தொடர்பாக கேட்டபோது அவர்களுடைய தகராறு முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த கணவன் குழவி கல்லால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலை உட்பட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.