தற்காப்பு கலை பயிற்சி - மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு SSA திட்டத்தில் தற்காப்புக் கலை (கராத்தே) பயிற்சி ஜனவரி மாதம் 2024 முதல் மார்ச் மாதம் 2024 வரை மூன்று மாதங்களுக்கு நடத்தப்பட்டது.
ஜனவரி மாதம் 7-வகுப்புகளும், பிப்ரவரி 9-வகுப்புகளும், மார்ச் 2024-மாதம் 8-வகுப்புகளும், மொத்தம் 24 வகுப்புகளாக 36-மணி நேரம் நடத்தப்பட்டன. மாணவிகளுக்கு கராத்தே பற்றிய அறிமுக வகுப்பு, தற்காப்பு கலையின் முக்கியத்துவம், போன்றவற்றை பற்றிய அறிமுக உரை, உடல் உறுதிக்கான உடற்பயிற்சி, கராத்தே பயிற்சியில் நின்ற நிலையில் (Heabadachi) கைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் குத்தும் முறைகளும், (Chuki) தடுத்து கொள்ள பயன்படுத்தும் முறைகளும், கால்களை பயன்படுத்தி தாக்கும் (Girai) முறைகளும் கற்றுத்தரப்பட்டன.
கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி தாக்கும் பயிற்சி முறைகள் முன், பின் அசைவு முறையிலான பயிற்சி தரப்பட்டது. மாணவிகளுக்கு மனதை ஒரு நிலைப்படுத்த தியான பயிற்சி முறைகள், மன தைரியத்துக்கு உரிய ஆலோசனைகள் தரப்பட்டன. மேலும், கராத்தே (தற்காப்புக்கலை) பயிற்சியிலிருந்து தேவையான நேரத்தில் தற்காத்து கொள்ள தற்காப்பு யுக்திகளும் எதிரிகளிடமிருந்து மீண்டு வர மன உறுதிக்கான யுக்திகளை நேரடியாக தாக்குதலுக்கு பயன்படுத்தும் சண்டை முறை யுக்திகளும், பயன்பாட்டிலுள்ள பென்சில், துப்பட்டா போன்ற பொருட்களை பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளவும், எதிரிகளின் உடல் பலவீனம் சம்பந்தப்பட்ட உடல் பகுதிகள் பற்றியும் கற்றுத்தரப்பட்டது. 3-மாதத்தில் மாணவிகள் முழு ஆர்வத்துடன் சிறப்பாக பயிற்சி எடுத்துக்கொண்டனர்.
மேலும் கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினர். இதன் நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் கராத்தே பயிற்சியாளர் மாஸ்டர் வி. சரவணன் தலைமையில் தலைமை ஆசிரியர் க. நடராஜன், உதவி ஆசிரியர்கள் கொ. வசந்தி, இரா.ராஜா,இரா.அனுசுயா, ப.சரோஜா தேவி, கா.விஜயா ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.