மயிலாடுதுறை : சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-11 11:51 GMT

கண்காணிப்பு பணி

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக காஞ்சிவாய், கருப்பூர் நண்டலாறு. நாட்டாறு மற்றும் எஸ்.புதூர் ஆறுகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கருப்பூர், எஸ.புதூர். காஞ்சிவாய், சாத்தனூர், மல்லபுரம், வடகரை ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து சிறப்புக்குழுவினரால் தகவல் சேகரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எஸ்.புதூர் அருகில் உள்ள நாட்டாறு ஆற்று பகுதியில் கிடைக்கப்பெற்ற சந்தேகத்தின் இடமாக விலங்கின் எச்சம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அவை சேகரிக்கப்பட்டு அது சிறுத்தையின் எச்சமா என்று ஆய்வு செய்து கண்டறிய சென்னை வண்டலூரில் உள்ள உயர்தொழில்நுட்ப வனஉயிரின பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தானியங்கி கேமராக்களும் கூண்டுகளும் காஞ்சிவாய், கருப்பூர் மற்றும் S.புதார் பகுதிகளில் ஏற்கனவே கடைசியாக சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்ட இடத்தை சுற்றி மாற்றி வைக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர இரவு நேரங்களில் வெப்பநிலையை கொண்டு கண்டறிய உதவும் டிரோன் கேமராக்கள் மூலமும் ஆற்று வழிகளிலும் முக்கிய இடங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று 10.04.2024 அன்று இரவு மயிலாடுதுறை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள நல்லத்துகுடி பகுதியில் சிலர் சிறுத்தையை நேரில் கண்டதாக அளித்த தகவலின் அடிப்படையில் குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் விசாரித்தும், சிறுத்தை அப்பகுதியில் இருந்ததற்கான அடையாளங்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இன்று அதிகாலை மீண்டும் மேற்படி நல்லத்துகுடி பகுதிக்கு சென்று சிறுத்தை அங்கு வந்துள்ளதா என்பதற்கான அடையாளங்களை தேடிய போது, சிறுத்தை கால்தடங்கள், மரத்தின் மீது ஏறிய அடையாளங்கள், சிறுத்தையின் எச்சம் போன்ற எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. இருப்பினும் இவ்விடத்திலும் தொடர் கண்காணிப்பு பணிகளும், தேடுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நண்டலாறு, நாட்டாறு பகுதிகளில் இன்றும் தொடர்ந்து தேடுதல் பணிகளும், கண்காணிப்பு பணிகளும், தானியங்கி கேமராக்கள், கூண்டுகள் மாற்றி அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என நாகை மாவட்ட வன பாதுகாவலர் அபிஷேக் கோமர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News