சிப்காட்டிற்காக நிலங்களை இழந்தவர்களுடன் மேதா பட்கர் சந்திப்பு

ஒரகடம் சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இதுவரை இழப்பீடு வழங்கப்படாத சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த குடும்பங்களை சமூக செயற்பட்டாளர் மேதா பட்கர் சந்தித்தார்.

Update: 2024-03-03 04:49 GMT

மேதா பட்கர் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவிற்காக, 2006ம் ஆண்டு அரசால் ஏராளமான நிலம் மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. இதில், சென்னக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த 13 தலித் குடும்பங்களின் 30.40 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலத்திற்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், சமூக ஆர்வலருமான மேதா பட்கர், பாதிக்கப்பட்ட 13 குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் கூறியாதாவது: இந்த நிலம் 1959ம் ஆண்டு பெரும் நில உரிமையாளர்களிடம் வேலை செய்த 13 தலித் குடும்பங்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இது அவர்களுக்கே சொந்தமான நிலம். இருப்பினும் பொய்யான ஆவணங்கள் வாயிலாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களின் நிலங்களுக்கு இழப்பீடு தர உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இதை தடுக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். எனவே, உழைக்கும் மக்களுக்கு சொந்தமான நிலத்திற்கான இழப்பீடை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்."

Tags:    

Similar News