திருக்கோயில் புனரமைப்பின் போது கிடைத்த உலோக சிலைகள்

தொல்லியல் துறை திருக்கோயில் புனரமைக்கும் பணியின் போது உடைந்த நிலையில் உலோகத்திலான நடராஜர் மற்றும் அஸ்திராயர் சிலைகள் மீட்கப்பட்டன.

Update: 2024-03-22 04:53 GMT
காஞ்சிபுரம் அருகே தொல்லியல் துறை திருக்கோயில் புனரமைக்கும் பணியின் போது உடைந்த நிலையில் உலோகத்திலான நடராஜர் மற்றும் அஸ்திராயர் சிலைகள் மீட்கப்பட்டன. சென்னையில் உள்ள தொல்லியத்துறை அலுவலகத்திற்கு சிலைகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிவன்கூடல் கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலை தொல்லியல் துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கோயிலை சீரமைக்கும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். கோயில் பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக கோயிலின் வெளி பிரகாரத்தில் கருங்கல் தரை பதிக்கும் பணிக்காக மணல் பிரகாரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்திடும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்ட போது மண்ணுக்கு அடியில் உடைந்த நிலையில், உலோகத்திலான நடராஜர், அஸ்திராயர் சிலைகள் மற்றும் பீடம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயிலுக்கு வந்த தமிழக தொல்லியல் துறை அதிகாரி ஜெ.பாஸ்கர், தொல்லியல் துறை ரசாயனர் ச.செந்தில்குமார், அறநிலையத்துறை ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் ஸ்ரீதரன், கோயில் தக்கார் சோ.செந்தில்குமார் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட சிலைகலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதையடுத்து சிலைகள் இரண்டாக உடைந்துள்ள காரணத்தாலும், அவை பூஜைக்கு ஏற்றதல்ல என்பதாலும் அவைகளைப் பாதுகாப்பதற்காக உடைந்த சிலைகளை தமிழக தொல்லியல் துறையின் சென்னை தலைமை அலுவலகத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
Tags:    

Similar News