வானிலை ஆய்வு மையத்தை குறை கூறக்கூடாது : ஜி கே வாசன்

தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்தது. எனவே அதனை குறை சொல்லக்கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2023-12-25 10:28 GMT

நிவாரண பொருட்கள் வழங்கிய ஜி.கே வாசன் 

தூத்துக்குடியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பார்வையிட்டார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, 3-வது மைல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய உணவுக்கழக குடோனுக்கும் சென்று, அங்கு தண்ணீரில் நனைந்து சேதமடைந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறியதாவது: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள். விவசாய பயிர்கள் அழிவு, கால்நடைகள் உயிரிழப்பு, வணிகர்களுக்கு பொருள் இழப்பு என பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை அரசு அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி போதிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் நிவாரணம் போதாது. இழப்பின் அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். ஆளுங்கட்சியினர் மூலம் நிவாரணம் வழங்க கூடாது. நிவாரணம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் நவீன கருவிகளுடன் செயல்படுகிறது. அவர்கள் துல்லியமாக கணித்து தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவித்து விட்டார்கள்.  ஆனால் தமிழக அரசுதான் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனை மறைப்பதற்காக தற்போது வானிலை ஆய்வு மையத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்லக்கூடாது. மத்திய அரசிடம் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News