மலை கிராமங்களில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

கொடக்கரை மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினரிடம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-21 15:58 GMT

மலை கிராமங்களில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு : மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டத்தில் உள்ள கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் உள்ள கொடக்கரை மலைக் கிராமத்திற்கு 10 கிலோ மீட்டர் நடந்தே சென்று அங்குள்ள பழங்குடியினர் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவத்துறை சார்பாக வழங்கப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குள்ள பழங்குடியினர் மக்களிடம் கலந்துரையாடி அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குழந்தை திருமணம் பற்றிய பாதிப்புகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு உரையாற்றினார். கொச்சாவூர் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அதன் பின் அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கொடகரை என்கின்ற மலைக்கிராமத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு வந்தோம். இக்கிராமத்திற்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கான முகாம் நடத்தப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிமக்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கண்கண்ணாடி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அருகில் உள்ள மலைக்கிராமமான பெட்டமுகிலாளம் மற்றும் அதை ஒட்டியுள்ள 8 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் நேரிடையாக சென்று பார்த்து அப்பகுதி மக்களின் தேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உருவாக்கப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவம் என்கின்ற மகத்தான திட்டம். இத்திட்டத்தின்படி  இன்று வரை ஒரு கோடியே 67 ஆயிரம் பேர் அவரவர் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பிசியோதெரபி, டயாலிசிஸ் உட்பட 5 வகை நோய்களுக்கு சிகிச்சைகளும், மருந்து பெட்டகங்களும் தரும் திட்டம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடக்கரை என்கின்ற மலைக்கிராமம் மற்றும் அதையொட்டியுள்ள மலைக்கிராமங்களில் இன்று ஆய்வு செய்தோம். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு பெரிய அளவில் சேதமடைந்து இருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழ்நாடு வனத்துறை சார்பில் வீடுகளை சீரமைக்கப்படும் என்கின்ற உறுதியினை தந்திருக்கிறோம். இவர்களுக்கு துணை சுகாதார வசதிகள் வேண்டும் என்றால் சுற்றி 100 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டியுள்ளது. தற்போது இவர்கள் இங்கு ஒரு துணை சுகாதார நிலையம் வேண்டும் என்கின்ற கோரிக்கையினை வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் ஒரு துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இப்பகுதிக்கு வந்தபோது ஒரு ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 2021 ஆகஸ்ட்  5 ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டபோது பெட்டமுகிலாளம் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் சுற்றியிருக்கும் 30 க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அருகில் உள்ள கொச்சாவூர் மலைக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தோம்.

இங்கு 56 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அப்பள்ளி தலைமையாசிரியர் மிக்க மகிழ்ச்சியோடு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பாட்டு வந்தவுடன் மாணவர்கள் காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் கல்விகற்று கொள்ளும் திறன் அதிகரித்து இருக்கிறது என்றும் கூறினார். மேலும், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வருகின்ற நிலை இருக்கிறது என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். மேலும் அப்பள்ளி மாணவர்களுடன் காலை சிற்றுண்டி அருந்துவதற்கான வாய்ப்பும் இன்று கிடைத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், தளி வட்டார மருத்துவ அலுவலர் சச்சரிதா, மக்களை தேடி மருத்துவ குழு தளி இயன்முறை மருத்துவர் சூர்யா, செவிலியர் ரூபக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News