ஆனைக்குட்டம் அணையினை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் கிராமத்தில் உள்ள இந்த நீர் தேக்கமானது 1984-1989 வருடம் கட்டப்பட்டு, 1989 இல் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நீர்த்தேக்கமானது 9 நீர் போக்கி கதவணைகளையும், ஒரு பிரதான கால்வாயும் கொண்ட அணையாகும். இந்த அணையின் நீர்வரத்து பகுதி 591 சதுர கிலோமீட்டர், கொள்ளளவு 125 மி.கன அடியாகும். இந்த நீர்த்தேக்கத்தில் இருக்கும் 9 கதவணைகள் உறுதித்தன்மை இழந்தும் மற்றும் ரப்பர் சீல் பழுதடைந்தும் உள்ளன. நீர்த்தேக்கத்திற்கு கீழ் உள்ள தடுப்பணை, நீர் தேக்கத்தின் மட்டத்தை விட உயரமாக உள்ளதால், நீர் கதவணையின் வெளிப்புறம் எப்போதும் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் கதவணைகளின் அடிப்பகுதி எப்போதும் நீரில் மூழ்கி இருப்பதால் ஷட்டர் துருப்பிடித்து ஓட்டை ஏற்பட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. மேலும் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு பருவ காலத்தில் நீர் தேக்கத்தில் 4.5 மீட்டர் மட்டத்திற்கு மேல் நீரின் அளவு உயரும்போது, அணையின் வலது கரையில் அருகில் பள்ளம் உருவாகி கரையில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் 4.5 மீட்டர் உயரத்திற்கு மேல் நீர்தேக்கத்தில் நீரை சேமிக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நீர்த்தேக்கத்தின் கரை மற்றும் பக்கவாட்டில் உள்ள மண்களை சென்னை தரமணியில் உள்ள மண் பரிசோதனை கோட்டத்தின் மூலம் ஆய்வு செய்தபோது, அணையின் கரை மற்றும் பக்கவாட்டில் சுண்ணாம்பு தன்மை அதிகளவில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த அணைக்கு சென்னை மாநில அணை பாதுகாப்பு இயக்ககம் மூலம் அணை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் 26.9.2023 அன்று அணையினை தள ஆய்வு செய்யப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாதிரி வடிவமைப்பு செய்து நீர் கடத்துவதை பரிசோதனை, நீர்த்தேக்கத்தில் உள்ள வண்டல் மண்ணின் ஆய்வு, மண் பரிசோதனை, நீர் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட வரவு அறிக்கை மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட பின், நீர்த்தேக்கத்தின் 9 கதவணைகளை புதுப்பித்தல், நீர் தேக்கத்தின் பலவீனமான கரை பகுதியை பலப்படுத்துதல், இடிதாங்கி மற்றும் கருவிகள் அமைத்தல், கரையினை பலப்படுத்துதல் போன்ற புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் கரையின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு ஆனைக்குட்டம் அணையின் முழு கொள்ளளவான 125 மி கன அடி உறுதி செய்யப்பட்டு, சுமார் 4500 ஏக்கர் விலை நிலங்கள் பயன்பெறும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் உதவி பொறியாளர்கள், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு.விவேகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.