காணாமல் போன பழங்குடி இளைஞர்: கண்டுப்பிடித்து தர கோரி மனு!
ஊட்டியை அடுத்த சாண்டிநல்லா பகுதியில் காணாமல் போன தோடர் பழங்குடியின இளைஞர் கண்டு பிடித்து தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தோடரின மக்கள் மனு அளித்தனர்.
Update: 2024-05-13 15:01 GMT
நீலகிரி மாவட்டம் சாண்டிநல்லா, எப்பகோடு மந்து பகுதியை சேர்ந்தவர் தேதீஸ்குட்டன்(49). தோடர் பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வீட்டிலிருந்து ஹங்கர் போர்டு பகுதியில் உள்ள கோவில் விசேஷத்திற்கு வந்தவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது சகோதரர் மணிஈசன் பைக்காரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், உறவினர்களும் அவரை தேடியுள்ளனர். ஆனால், இது வரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தேதீஸ்குட்டனை கண்டுபிடித்து தரக்கோரி தோடரின மக்கள் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இன்று தலைவர் மந்தேஸ் குட்டன் தலைமையில் தோடரின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மந்தேஸ் குட்டன் கூறுகையில், ‘கேத்தீஸ் குட்டன் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தை புகார் அளித்தோம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன இளைஞரை கண்டுபிடித்து தர கோரி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தோடரின மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,’ என்றார்