குடிநீரில் கழிவுநீர் கலப்பு: நிரந்தர தீர்வு எப்போது?
மதுரவாயலில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரவாயலில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டில், மதுரவாயல் மெட்ரோ நகர் உள்ளது. மெட்ரோ நகர் மூன்றாவது குறுக்கு தெருவில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், மதுரவாயல் பகுதியில் கடந்த 2012,- 2016ல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்ட பின், கடந்த 2018ம் ஆண்டு முதல், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு, 50 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதாள சாக்கடை திட்ட பணிகளின் போதும், பிற சேவை துறைகள் மேற்கொண்ட பணிகளாலும், குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதையடுத்து, 9 கோடி ரூபாய் செலவில், 146 மற்றும் 147வது வார்டில், குடிநீர் குழாயை மாற்றி அமைக்க, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தற்போது, 150வது வார்டில் உள்ள மெட்ரோ நகர் மூன்றாவது குறுக்கு தெருவில், தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த தெரு ஏற்கனவே, 146வது வார்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த தெரு மக்கள் கிணறு, ஆழ்துளைக் கிணறு மற்றும் 'கேன்' குடிநீரையே நம்பி உள்ளனர். எனவே, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.