புதிய பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
காஞ்சிபுரத்தில் ரூ3.54 கோடி மதிப்பீட்டில், அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆய்வகம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பறைகள் கூடிய புதிய கட்டிடங்களுக்கான கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.;
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வகையில் , மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ஒருங்கிணைந்த ஆய்வக கட்டடம் ரூ 1 கோடி மதிப்பீட்டில் 3378 சதுரடி பரப்பளவில் கட்ட ஒப்புதல் அளித்தது.
இதேபோல் , காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆற்காடு நாராயணசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500 மாணவிகள் படித்து வரும் நிலையில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் குறைவாக உள்ளதாக புகாரின் அடிப்படையில், 9507 சதுர அடி பரப்பளவில், இரண்டு மாடி கட்டிடம் ரூபாய் 2.54 கோடி மதிப்பீட்டில் கட்ட ஒப்புதல் கிடைத்தது.
இந்நிலையில் இந்த புதிய கட்டிடங்கள் கட்டும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.மேலும் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் அரசு விதிகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பாதுகாப்பாக செயல்பட பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் , மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோமசுந்தர், இளையராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.