மூலவர் ஸ்டாலின், உற்சவர் உதயநிதி - ஆ.ராசா எம்.பி

மூலவராக மு.க.ஸ்டாலின் அங்கே அமர்ந்திருக்கிறார், உற்சவராக விளையாட்டுத்துறை அமைச்சர் இங்கு வந்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் உற்சவரராக இருந்து ஆட்சியை நடத்துகிறார் என எம்பி ஆ.ராசா தெரிவித்தார்.

Update: 2024-02-12 01:37 GMT

கோவை சரவணவம்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்,அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, நீலகிரி எம்பி ஆ.ராசா, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய நீலகிரி எம்பி ஆ.ராசா, இந்த நிகழ்ச்சி மலைப்பாகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.நானும் அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் எல்லாம் கலைஞருடன் பயணித்தவர்கள் எனவும் இன்றைய முதலமைச்சர் உடனும் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் எனவும் தற்பொழுது தம்பி உதயநிதியுடனும் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

கலைஞர் முதுமை காரணமாக முதலமைச்சராக இருந்தாலும் அன்றைக்கு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மகத்தான மனிதர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆற்றிய பணிகளை எல்லாம் கலைஞரிடம் கூறுவோம் எனவும் அப்படி கூறும் போது கலைஞர் நீங்கள் மூலவர் உற்சவரராக தளபதி(மு.க.ஸ்டாலின்) சென்று கொண்டிருக்கிறார் என கூறுவோம் என தெரிவித்தார்.

தற்பொழுது முதுமை காரணமாக அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை பெறுகின்ற காரணத்தினால் மூலவராக மு.க.ஸ்டாலின் அங்கே அமர்ந்திருக்கிறார் எனவும் உற்சவராக விளையாட்டுத்துறை அமைச்சர் இங்கு வந்திருக்கிறார் என தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் உற்சவரராக இருந்து ஆட்சியை நடத்துகிறார் எனவும் இங்கிருந்து மூலவராக இருக்க கூடிய மு.க.ஸ்டாலின் க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த உற்சவரை வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பெரம்பலூருக்கு 300 கோடி ரூபாய் குடிநீர் திட்டத்தையும் செய்து தர வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News