கடும் பனியால் முருங்கை உற்பத்தி பாதிப்பு - விவசாயிகள் கவலை.

அரவக்குறிச்சியில் நிலவும் கடும் பனியால் முருங்கை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-01-21 02:42 GMT

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான அரவக்குறிச்சி, ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய் தமிழகத்தின் பல இடங்களுக்கும், கர்நாடகா, கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், ஈசநத்தம்,இந்திரா நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த கொள்முதல் மையங்களில் இருந்து,முருங்கைக் காய்களை மொத்த வியாபாரிகள் வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில், அரவக்குறிச்சியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாகவும், தற்போது தை மாதம் பிறந்ததிலிருந்து தொடர்ந்து மூடுபனி போல் பெய்து வரும் பனியால், முருங்கை பூக்கள் உதிர்ந்தது. இந்த வருடம் மார்ச் வரை முருங்கை சீசன் இருக்கிறது. ஆனால், மரங்களில் உள்ள முருங்கைப்பூக்கள் மழை,பனி காரணமாக உதிரத் துவங்கியதால், காய்த்திருந்த முருங்கைக்காய்களும் ஈரப்பதத்தால், பழுத்து வெம்பிபோய் உள்ளது. இதனால், முருங்கைக்காயை பறித்து விற்பனை செய்ய இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. காய்களை பறிக்கும் கூலி கூட கொடுக்க இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த சீசனுக்கு காய்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால், முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News