குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி உள்ளாகி வருகின்றனர்.
வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பஸ், கனரக வாகனம் என தினமும் 50,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் புதியதாக கட்டப்பட்டு வரும் மின்சார சுடுகாடு அருகே பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பையை நேற்று காலை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட புகையால் இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் முறையான தகவல் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.