அதிகரிக்கும் போஸ்டர்களால் வாகன ஓட்டிகள் அவதி !
பள்ளிபாளையம் பிரதான சாலை பகுதியில் போஸ்டர்கள் அதிகம் ஒட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈரோடு ,சேலம், சென்னை ,நாமக்கல் திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பள்ளிபாளையம் பிரதான சாலை வழியாக கடந்து செல்கிறது. இந்நிலையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கை காரணமாக பள்ளி பாளையத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் காவிரி ஆற்று பாலம் வரையிலும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக 150-க்கும் மேற்பட்ட மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், வர்த்தக ,வணிக கடை நிறுவனங்கள் நடத்துவோர், என பல்வேறு தரப்பினர் தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில், போஸ்டர்களை ஒட்டிய வண்ணம் உள்ளனர். இது அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்புவதால், அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து டிவிஎஸ் மேடு என்ற பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டி செந்தில்நாதன் என்பவர் கூறும் பொழுது ,முன்பெல்லாம் போஸ்டர் ஒட்டுவதற்கான பெரிய அளவிற்கான இடம் இல்லாததால், அரசியல் கட்சியினர், சினிமா போஸ்டர் ஒட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் ஏதோ ஒரு சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டி விட்டு சென்று விடுவர். தற்போது மேம்பாலம் அமைக்கப்படுவதினாலும் இடப்பரப்பளவு அதிகரித்ததன் காரணமாக கடந்த ஒரு ஆண்டாகவே அளவுக்கு அதிகமான பல்வேறு வகையான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
இது நகரில் புறச்சூழல் அழகை சீர்குலைப்பதோடு, இல்லாமல் வாகன ஓட்டிகளின் கவனத்தையும் திசை திருப்பி வருகிறது. எனவே இது போன்ற போஸ்டர் ஒட்டும் நிறுவனங்கள் மற்றும் கட்சியினர் மீது நெடுஞ்சாலை துறையினர் அபராதம் விதிக்க வேண்டும். மேம்பால பணிகள் முழுமையாக முடிவுற்ற பிறகு சென்னை ,பெங்களூர் போன்ற வளர்ந்த நகரங்களில் உள்ளது போல ,கண்கவர் ஓவியங்களை மேம்பால தூண்களின் மேலே வரைந்து வைத்தால் இதுபோல போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.