காஞ்சிவாக்கம் சாலையில் மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி.
செரப்பணஞ்சேரி - காஞ்சிவாக்கம் சாலையில் மின் மிளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் இருளில் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரியில் இருந்து, காஞ்சிவாக்கம் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியாக, நாவலுார், காஞ்சிவாக்கம் நாட்டரசம்பட்டு, உமையாள்பரனசேரி, சிறுவஞ்சுர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த முக்கிய சாலையில், பெரும்பகுதிளின் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டாக மாறி, வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்
. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் இரவு வீடு திரும்பும் போது, இருளில் அச்சத்துடன் செல்ல வேண்டியது உள்ளது. மேலும், மாடுகள் ஆங்காங்கே படுத்திருப்பதால், இரவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், திடீரென சாலையில் மாடுகள் படுத்திருப்பதை பார்த்து, திகைத்து அவற்றின் மீது மோதியும், பிரேக் அடித்து தடுமாறி கீழே விழுந்தும் விபத்தினை சந்திக்கிறனர். எனவே, சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு, இச்சாலையில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.