தேர்தலை புறக்கணிக்க மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் முடிவு!

நீலகிரியில் தேயிலை தூளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணய வாக்குறுதி அளிக்காததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2024-04-18 01:45 GMT

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இத்தொழிலில் சுமார் 70 ஆயிரம் சிறு, குறு விவசாய குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 3 லட்சம் பேர பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 ஆண்டுகளாக நீலகிரி பசுந்தேயிலைக்கு சரியான கொள்முதல் விலை கிடைக்காமல் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 13 முதல் ரூ.15 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பசுந்தேயிலைக்கான உற்பத்தி செலவே ஒரு கிலோவுக்கு ரூ. 23 ஆக உள்ளது. இதனால் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தேயிலை விவசாயத்தை கைவிட்டு மலை காய்கறி விவசாயத்திற்கு மாறுகின்றனர். மேலும் ஒரு சிலர் வேறு மாவட்டங்களுக்கு வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.

இதற்கிடையே பசுந்தேயிலைக்கு ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ. 35 வழங்க கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி எந்த ஒரு பலனும் கிடைக்காத நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில், அரசியல் கட்சிகள் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வாக்குறுதி தராவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்தனர். ஆனால் வாக்குப்பதிவுக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களும் விவசாயிகளின் பிரதான கோரிக்கையான தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.200 நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால், சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ள மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத்தினர் இந்த நாடாளுமன்ற தேர்தலிலை புறக்கணிப்பதாக தும்பூர் போஜன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கதால் தேர்தலை புறக்கணிப்பதாக பல்வேறு சிறிய கிராமத்தினர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மலை மாவட்டம் சிறு விவசாயிகள் சங்கமும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது நீலகிரியில் வாக்கு சதவீதம் குறையக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News