விளையாட்டு மையம் கட்டும் பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்
கோவில்பட்டியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் கட்டும் பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் கட்டுவதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (09.03.2024) அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார்கள்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மானிய கோரிக்கையில் அறிவித்தபடி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் தரை தளம் 825 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் 428 சதுர மீட்டர் பரப்பளவிலும் என மொத்தம் 1253 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, கழிப்பறை, பொருட்கள் வைக்கும் அறை, அலுவலக அறை, விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறை, பார்வையாளர்கள் அறை, சிகிச்சை அறை போன்ற வசதிகளுடன் அமையப்பெற உள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு. அந்தோனி அதிஷ்ராஜ் அவர்களும், சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் எம். ரோஸ் பாத்திமா மேரி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.