நீங்கள் நலமா? : மக்களிடம் Feedback கேட்ட எம்பி ராஜேஸ்குமார்

கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி , கலெக்டர் ச.உமா ஆகியோர் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தனர்.;

Update: 2024-03-06 14:04 GMT

நாமக்கல் மாவட்ட மக்களிடம் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து  கைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்,அரசு ஏழை எளிய விளிம்புநிலை பொதுமக்கள் பயனடைந்திட, பல்வேறு திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறும், “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத் திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் (Feedback) பெறப்படும். அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.

அதன் அடுத்தகட்டமாக பொதுமக்களுக்கு அரசுத் துறைகளால் வழங்கப்படும் இதர சேவைகளின் மீதும் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் பின்னூட்டங்கள் இதற்கென உருவாக்கப்படும் “நீங்கள் நலமா“ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வலைத்தளம் மக்களின் கருத்துகளைப் பெறும் ஒரு திறந்தவெளி அமைப்பாகச் செயல்படும். மேலும், இவ்வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

“நீங்கள் நலமா” என்ற புதியதொரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், “புதுமைப் பெண்” திட்டம், பணிபுரியும் மகளிருக்கான விடுதி திட்டமான “தோழி” திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா முன்னிலையில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News