கால்வாயில் மண் திட்டு - முறையாக துார்வார கோரிக்கை

விருகம்பாக்கம் கால்வாயை முறையாக தூர்வாரி நீர் தடையின்றி செல்ல நடவடிகை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-02-25 09:02 GMT

 விருகம்பாக்கம் கால்வாய் 

வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றத்தில் விருகம்பாக்கம் கால்வாய் ஆரம்பமாகிறது. நெற்குன்றம், விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இந்த கால்வாயில் வெளியேறி வருகிறது. இந்த கால்வாய் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், மேத்தா நகர் வழியாக, நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள இந்த கால்வாய், இந்நாள் வரை முறையாக அதன் உண்மையான ஆழத்திற்கு துார்வாரப்படவில்லை.

கடந்த மழைக்காலத்திற்கு முன், விருகம்பாக்கம் கால்வாயின் மேல் அடுக்கில் உள்ள குப்பைக் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டன. இதனால், 'மிக்ஜாம்' புயல் கன மழையில் கால்வாய் நிரம்பி வழிந்தது. இதன் விளைவாக விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் இருந்து தண்ணீர் வெளியேறாமல், நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தற்போது, மழை முடிந்த நிலையில், மீண்டும் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பை மற்றும் கழிவுகள் நிறைந்தும், கால்வாயில் ஆங்காங்கே மண் திட்டுகள் உருவாகி உள்ளன. இவை, கால்வாய் நீரோட்டத்திற்கு தடையாக உள்ளன. எனவே, விருகம்பாக்கம் கால்வாயை அதன் உண்மையான ஆழத்திற்கு துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News