வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
நாமக்கல் நகராட்சியில் இதுவரை 62 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்ய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரிகளை நகராட்சிக்கு செலுத்தவேண்டும் என நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாமக்கல் நகராட்சியில் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டி நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் நகராட்சியில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், காலிமனைகள், குடிநீர் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் என மொத்தம் 55 ஆயிரம் வரி விதிப்புகள் உள்ளன. இவை மூலம் ஆண்டுக்கு நாமக்கல் நகராட்சிக்கு ரூ 25 கோடி வருவாய் வருகிறது.
நாமக்கல் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கட்டணம், பாதாளசாக்கடை இணைப்பு கட்டணம், சொத்துவரி, தொழில் வரி ஆகியவற்றை ஆண்டுக்கு இரண்டு தவனையாக செலுத்தி வருகிறார்கள். கடந்த அக்டோபர் இறுதிக்குள் நடப்பு ஆண்டுக்கான வரிகளை பொதுமக்கள் நிலுவையின்றி செலுத்தியிருக்கவேண்டும். நாமக்கல் நகராட்சி பகுதியில், நிலுவையில் உள்ள வரிகள் முழுமையாக வசூலாகவில்லை. இதையடுத்து நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உத்தரவுப்படி, கடந்த இரண்டு மாதமாக நாமக்கல் நகராட்சியில் வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பிரசாத் ஆகியோர் தலைமையில் தினமும் வருவாய் பிரிவு ஊழியர்கள் மற்றும் நகராட்சியின் பிற துறை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்து வருகின்றனர். அதிகம் பாக்கி வைத்து உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரி வசூலில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை 62 சதவீதம் நிலுவையில் உள்ள வரிகள் வசூல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிகளை நிலுவையில் வைத்துள்ளவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்களில் நகராட்சி ஊழியர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். தொழில் வரி, காலிமனை வரி அதிகமாக நிலுவையில் இருக்கிறது. இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் கூறியதாவது... நாமக்கல் நகராட்சியில் இதுவரை 62 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்ய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரிகளை நகராட்சிக்கு செலுத்தவேண்டும் என்றார்.