புதுமாப்பிள்ளை கொலை வழக்கு - பெற்றோர் போலீசில் மனு !
சேலத்தில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் மனைவி, மாமியாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என புகார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-01 09:24 GMT
கொலை செய்யப்பட்ட வாலிபர்
சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுமாப்பிள்ளையான அந்த வாலிபர் கடந்த 25-ந் தேதி கந்தம்பட்டி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ், நபிகான் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளையின் பெற்றோர் நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் மகனுக்கு எந்த ஒரு தவறான பழக்கமும் கிடையாது. திருமணமானதும் பெண்ணின் வீட்டார் எங்கள் மகனை வீட்டோடு மாப்பிள்ளையாக அழைத்து சென்று விட்டனர். சம்பவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் மாமியார் தன்னை தொந்தரவு செய்வதாக கூறி எனது வீட்டுக்கு வந்து விட்டார். இதையடுத்து நாங்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இந்த நிலையில் எங்கள் மகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் மாமியாரிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.