குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது. எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள்.